Dec 22, 2008

A Stray dog whines !


I love dogs and this dog article , I had written for Nilacharal.com is one of my favourites :-)





வணக்கம். 'லொள்'ளாயிருக்கீங்களா, sorry நல்லாயிருக்கீங்களா? 
நான் தான்ங்க உங்க தெருவில குப்பைத் தொட்டி பக்கத்துல குடியிருக்கிற நாய் நாகராஜன். 

ரொம்ப நாளா என் மனசுல பூட்டி வைச்சதெல்லாம் இப்ப உங்க கிட்ட அவுத்து விடுறேன்.என்ன வாழ்க்கைங்க இது? நாய்ப் பொழைப்பு பிழைச்சுக்கிட்டு இருக்கேன். “நாய் நன்றியுள்ள ஜீவன்” என்று நன்றிக்கு எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க, அப்புறமா யாரையாவது திட்டும் போது, “நன்றி கெட்ட நாயே”ன்னு திட்டுவாங்க. என்னங்க இது நியாயம்?

"இளமையில் கல்"ன்னு அவ்வைப் பாட்டி சொன்னாங்க. ஆனால் எங்களுக்கு இளமையிலும் சரி, முதுமையிலும் சரி,'கல்'தான் எங்களை அடிக்க உதவும் யுதம். கல் எனப்படுவது எதோ நாய்களை அடிப்பதற்கென்றே கடவுள் உருவாக்கியதாக இந்த மனிதர்களுக்கு நினைப்புங்க. "கல்லைக் கண்டா நாயைக் காணும்; நாயைக் கண்டா கல்லைக் காணும்" என்று பழமொழி வேற, ஹ¤ம்!

எங்க அப்பா, தாத்தா காலத்தில எல்லாம், மக்கள் உட்கார்ந்து நிதானமா சாப்பிடுவாங்க. இப்ப தான் fast food கலாச்சாரம் வந்து எல்லாம் எங்களை மாதிரி நின்னுக்கிட்டே சாப்பிடுறாங்க. அதனால எனக்கு என்னன்னு கேட்கிறீங்களா? விஷயம் இருக்கு. ஒரு நாள் மழைக்கால சாயங்கால நேரம், பக்கத்து வீதியில குடியிருக்கிற ஜிம்மியை சைட் அடிச்சுட்டு வேகமா ஓடி வந்திட்டிருந்தேன். மழைக்காலம் வேறயா, இயற்கையின் அழைப்புக்கு பதில் சொல்லலாமுன்னு, பக்கத்துல இருந்த போஸ்ட் கம்பத்தில கால தூக்கி அடக்கி வச்ச அவஸ்தைய தீர்த்துட்டு மெதுவா நடந்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது அது போஸ்ட் கம்பமில்லை, fast food சாப்பிட்டு கொண்டிருந்த உயரமான ஒருத்தனோட காலுன்னு, தன் கறுப்பு பேண்ட் ஈரமானதுல கடுப்பான அவன் விட்டான் பாருங்க ஒரு உதை, அதில இருந்து, கழுத்து வலிச்சாலும் நிமிர்ந்து பார்த்து அது போஸ்ட் கம்பமா என்று உறுதிப்படுத்திட்டு தான் காலைத் தூக்கிறதே.

என்னமோ நாங்க கடிக்கிறதால மட்டும் தான், ரேபீஸ் நோய் பரவுர மாதிரி ஒரு பிரம்மைய உருவாக்கிட்டாங்க. ஏன் பூனை, குரங்கு, வவ்வால் கடிச்சா கூட தான் ரேபீஸ் வரும். ஒரு மனுஷனைக் கடிப்பதற்கு முன்னாடி நாங்க எவ்வளவு பயப்பட வேண்டியிருக்கு தெரியுமா? மனுஷ ரத்தத்தின் மூலமாத் தான் எவ்வளவோ நோய்கள் பரவுதே. 

சரி, தெருவில தான் இப்படி நாய் படாத பாடு படுறோம். ஏதாவது வேலைக்குப் போகலாம்னு போலீஸ் நாய் கிடலாம்ன்னு போனேங்க. ஆனா பாருங்க எங்கிட்ட போலீஸ்ல சேருவதற்கு தகுதி, அதாங்க ‘தொப்பை’ இல்லைன்னுட்டாங்க.

மனுஷங்களுக்குள்ள தான் ஜாதி, மதம் என்று அடிச்சுக்கிறாங்கன்னா எங்களுக்குள்ளயும் ஜாதியை நுழைச்சுட்டாங்கப்பா. பஞ்சை உருட்டி வச்ச மாதிரி, வெள்ளை உடம்பில இங்க் தெளிச்ச மாதிரி இருக்கிற காவல் காக்காத உதவாக்கரை நாய்கள் எல்லாம் உயர்ஜாதியாம். அதுங்களுக்கு வேலையே ஏ.சி. ரூம்ல, வேளாவேளைக்கு “Pedigree” சாப்பிட்டு, காரில் ஜன்னல் வழியா தலை நீட்டி ஊர்சுற்றிட்டு, எஜமானர்கள் கிட்ட போய் குழைவது தான். நாங்க மழை, வெயில்ன்னு பார்க்காம தெருவில அலைஞ்சு, கார்ப்பரேஷன் காரங்க கண்ணில படாம, நீங்க வேணாம்னு தூக்கிப்போடறதையெல்லாம் சாப்பிட்டு, அதுக்கு நன்றியா தெருவுக்கு காவலா இருந்தா, நாங்கெல்லாம் கீழ்ஜாதி நாட்டு நாய்களாம்.என்னங்க பண்றது. எங்க வாலை நிமிர்த்தினாலும் நிமிர்த்தலாம், இந்த மனுஷங்களைத் திருத்த முடியாது. 

இருந்தாலும் இந்தியாவுல பொறந்ததற்கு சந்தோஷப்படுறேங்க. ஏன்னு கேக்குறீங்களா? தாய்லாந்துலயோ, கொரியாவுலயோ பிறந்திருந்தா, இந்நேரம் ‘நாய் நைண்டி பைவ்” கியிருப்பேன் இல்லையா?


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons