Jun 1, 2009

தீர்ப்பு - சிறுகதை


வணக்கங்க ! எம் பேரு அலமேலு. எங்க கிராமத்திலேயே நான் தான் நாலெழுத்து படிச்சவ. பொட்டப்புள்ள தானேன்னு பார்க்காம எங்க அப்பா என்னை S.S.L.C வரைக்கும் படிக்க வச்சாரு. அதனால தான் ஏதோ இப்படி எழுத முடியுது.

என் வாழ்க்கையும் 'அழகி' படத்துல வர்ற மாதிரி கிராமப்பள்ளிக்கூடம், ஆட்டம், பாட்டம், கூத்துன்னு ஒரே கொண்டாட்டமாத்தான் இருந்துச்சு. எப்ப நான் வயசுக்கு வந்து, எங்க மாமாக்கு வாக்கப்பட்டேனோ, அப்பத்தான் வாழ்க்கைன்னா என்னன்னு புரிய ஆரம்பிச்சது. எங்க மாமா பட்டணத்துல பெரிய படிப்பெல்லாம் படிச்சவர். என்னைக் கட்டின நேரம் சீட்டுக் கம்பெனி ஆரம்பிச்சு குறுகிய காலத்துல லட்சாதிபதி ஆயிட்டாரு.எப்பவும் கையில காந்தி தாத்தா சிரிச்சுக்கிட்டிருப்பார். பைனான்ஸ் , சீட்டுன்னு என்னென்னவோ பேசுவாரு. எனக்குத்தான் எதுவுமே புரியாது.

அப்படியே சந்தோஷமா போயிட்டிருந்தப்போ, என்ன, எங்க எப்படி தப்பாசுன்னு தெரியல, அவருக்கு பெரிய நெருக்கடி வந்திடுச்சு. திடீரென
ஒரு ராத்திரியில பெட்டி நிறைய பணக்கட்டுகளோட கிளம்பினவர்தான். அடுத்த நாள் பேப்பர்ல எல்லாம் போட்டோ வந்து பிரபலமாயிட்டாரு. அவர் கம்பெனியில பணம் கட்டி ஏமாந்தவங்க, அவர் ஆபீசை நொறுக்கி, கொளுத்தி சின்னாபின்னமாக்கிட்டாங்க. குருவி சேர்த்த மாதிரி சேர்த்த காசையெல்லாம் பறிகொடுத்த ஏழை சனங்க வாயில வயித்தில அடிச்சு அழுத காட்சியெல்லாம் சன் டிவியில காண்பிச்சாங்க. அதிலயும் ஒரு வயசான அம்மா, மண்ணை வாரி இறைச்சு , அந்தப் பாவி மண்ணாப் போகனும்னு சாபம் கொடுத்ததைப் பார்த்தப்போ என் குலையெல்லாம் நடுங்கிப் போச்சு.



அப்புறம் ரொம்ப நாளா அவர் கிட்ட இருந்து தகவலே இல்லை. எங்க கல்யாண நாளை ஒட்டி திடீரென ஒரு ராத்திரி போன் பண்ணினாரு. அமெரிக்காவில், நியூயோர்க்கோ ஏதோ ஒரு ஊரு பேரை சொல்லி எங்க இருக்கிற ஒரு உயரமான கட்டிடத்துல மேகத்தைத் தொட்டுகிட்டே பேசறதா சொன்னாரு. அப்பக் கூட நான் எடுத்துச் சொன்னேங்க, ஊராரு காசு நமக்கு வேணாம். எப்படியாவது திருப்பிக் கொடுத்திடுங்கன்னு . அவரு அமெரிக்கா போய் அங்கயும் ஒரு சீட்டுக் கம்பெனி ஆரம்பிசுட்டதா சொன்னப்ப, அவங்க காசையும் ஏப்பம் விடப் போறாருன்னு தெரிஞ்சு போச்சு. இந்தப் பொழப்பே வேணாங்கன்னு சொல்லிட்டிருந்தப்போ, இடி விழுந்த மாதிரு சத்தம் கேட்டுச்சு. அப்புறம் போன் கட் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் அவர் எனக்கு போன் பண்ணவே இல்லை....

இந்த கல்யாண நாளுக்காவது திரும்பவும் போன் பண்ணுவாரான்னு ஏக்கத்தோட காத்துட்டிருக்கேன். எங்களுக்கு கல்யாணம் ஆனது செப்டம்பர் 11 ஆம் தேதி!!!


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons