ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவனுக்கு சுமார் முப்பது வயது இருக்கலாம். கறிக்கடைக்காரன் வளர்த்த நாய் மாதிரி நல்லா 'கொழு கொழு' வென்ற தேகம், கண்ணில் ரேபான், பையில ஐ போன், காதுல ஐ பாட், கையில லேப் டாப் என எல்லா விதத்திலும் பணம் பகட்டாய் பல்லிளித்தது. டாக்சியில் ஏறி நேராய் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில், பொய்ப் பெயரில் பதிந்து வைத்திருந்த அறைக்குள் நுழைந்து அறையை நோட்டம் விட்டான். சந்தேகப்படும் விதமாக எதுவும் தட்டுப்படாதால், பைக்குலிருந்து ஒரு பழைய நோக்கியா கைபேசியை எடுத்து, அவனுக்குக் கொடுக்கபட்டிருந்த சிம் கார்டை சொருகி, அந்த ரகசிய எண்ணை ஒற்றினான்.
மறுமுனையில் பேசிய அந்த அதிகாரமிக்க கர கர குரல் சற்றே பதற்றத்துடன் ஒலித்தது. தமிழகத்தின் மிக வலிமையான ஒரு அரசியல்வாதி தன்னை நம்பி சிங்கப்பூரில் இருந்து வரவழைத்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஆர்.டி.எக்ஸ். என்ற சந்தேக பாஷையில் அழைக்கப்பட்ட அவனது வெடிகுண்டு ஞானம் உலக அளவில் அவ்வளவு பிரசித்தி.
அமைச்சர் நேராக விஷயத்திற்கு வந்தார். இன்னைக்கு மதியம் கட்சி அலுவலகத்துல நடக்கப்போற உயர்மட்டக் குழு சந்திப்புக்குப் போறேன். அந்த அரை மணி நேர மீட்டிங் முடிஞ்சு நாலு மணிக்கு அங்கிருந்து கிளம்பிடுவேன். அதற்கப்புறம் அங்க எதிரணிக் கூட்டமும், வேலை வெட்டியில்லாத தொண்டர் கூட்டமும் தான் கட்சிப் பணி ஆற்றிட்டு இருப்பாங்க. சரியா ஆறு மணிக்கு அங்க குண்டு வெடித்து அந்த கட்டிடமே தரை மட்டமாக வேண்டும்.
கட்சிக்குள்ளேயே எனக்கு எதிரான கூட்டத்தையும் அழிச்சிடலாம், என்னைக் குறிவச்சு எதிர்க்கட்சி பண்ணிய சதின்னு சொல்லி அனுதாப அலையையும் உருவாக்கிடலாம். தேர்தல் வேற வேகமா நெருங்கிட்டிருக்கு, இப்படி ஏதாவது பண்ணியாகணும் ஆர். டி. எக்ஸ். என்றார்.
தன் சுவிஸ் வங்கிக் கணக்கில் அமைச்சர் சொன்னபடி வந்து விழுந்த ஏழு இலக்க எண்கள் அளித்த உத்வேகத்தோடு கட்சிக்கரை வேட்டியோடு அலுவலகம் சென்று, சரியான இடங்களைத் தேர்ந்தெடுத்து டைமர் செட் செய்த ஆர்.டி.எக்ஸ். வைத்து விசிலடித்தபடி வெளியே வந்தான்.
ஸ்காட்ச் கதகதப்பில் சற்றே கண்ணசந்தவன் கண் விழித்த போது மணி ஐந்தரை. ரிட்டர்ன் விமானத்துக்கு நேரமானதை உணர்ந்து அவசர அவசரமாய் ரூமை காலி செய்து ஏர்போர்ட் விரைந்தான். செக்-இன் செய்ய அடித்துப் பிடித்துப் போய் நின்ற போது அந்த எப்போதும் புன்னைகைக்கும் அழகுப் பதுமை, "சார் உங்கள் ஏழு மணி சிங்கப்பூர் விமானத்துக்கு நீங்கள் மிகவும் சீக்கிரமே வந்து விட்டீர்கள். இப்போது தான் மணி நாலு ஆகிறது," என்றாள்.
காலையில் சென்னையில் இறங்கியவுடன் கடிகாரத்தில் சிங்கப்பூர் நேரத்தை மாற்றாதது சுரீரென உரைக்க, காலுக்குக் கீழ் பூமி நழுவுவது போலிருந்தது ஆர்.டி.எக்சுக்கு.
விமான நிலைய எல்.சி.டி. டீவியில் பிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது!
5 comments:
கதை ரொம்ப சூப்பராக இருக்கு!!
Mrs.Menaga,
Thanks for your kind words
அட்டகாசம் .. நல்லா இருக்கு ,, ரசிச்சேன் முடிவ ..
நன்றி சூரியன்
Nice Vignesh..
Post a Comment