Jul 27, 2024

Divya Pasuram - Vanna Maadangal

ராஜாவின்  பக்தி தனிப்பாடல் தொகுப்புகள் தனி ரகம். அதிலும் அவர் மனங்கவர்ந்த ரமணரைப் பாடும் பாடல்கள் உயிரை உருக்கி எடுத்து விடும். பக்திபாடல்களுக்கு என்று இருக்கும் சில இலக்கணங்களை அடித்து நொறுக்கியிருப்பார் ராஜா. திருவாசகம் ஒரு ambitious project…. உலகப்புகழ் பெற்ற கலைஞர்கள் மற்றும் BSO இசை வல்லுனர்களின் துணை கொண்டு மாணிக்கவாசகரின் தமிழுக்கு இசைக்காப்பு போட்டு மெருகேற்றியிருப்பார். அப்போது ராஜாவின் திருவாசகத்தைக் கேட்டு உருகிய எழுத்தாளர் சுஜாதா, அடுத்ததாக ராஜா திவ்யப்பிரபந்தங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.


2021 ஆண்டு வாக்கில் ராஜாவின் இசையில் திவ்யப்பாசுரங்கள் வெளிவர இருப்பதாக அறிவித்து, பின் ஒரு வழியாக 2024 ஜூன் மாதத்தில் தான் பாடல்கள் வெளியிடப்பட்டன. பெரிய இசை நிறுவனங்களின் வெளியீடு இல்லாத காரணத்தினாலும், பெரிதாக விளம்பரங்கள் இல்லாததாலும், இந்த அற்புதம் மக்களை பெரிதாக சென்றடையவில்லை. ராஜாவின் தீவிர ரசிகர்களே சில பாடல்களை மட்டும் சிலாகித்துக் கடந்தனர்.


இந்த தொகுப்பில் ராஜா தேர்ந்தெடுத்து இசையமைத்துள்ள பாடல்களைத் தேடித்தேடிப் படித்து அர்த்தம் தெளிந்து பின் பாடல்களைக் கேட்ட போது தான் ராஜாவின் விஸ்வரூபம் புரிகிறது. ஹரிஹரன், அனன்யா பட், ஷரத், விபாவரி மற்றும் ராஜாவின் குரல்களில் பாடல்கள் ஒவ்வொன்றிலும் ராஜாவின் உழைப்பு அபாரமானது.


இவற்றில் கேட்டதும் மனதில் ஒட்டிக்கொண்ட பாடல்வண்ண மாடங்கள் சூழ்”… கண்ணன் பிள்ளைத்தமிழ் எழுதிய பெரியாழ்வாரின் முதல் பாசுரம் இது.


“வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்,

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்

கண்ணன் முற்றம் கலந்தள றாயிற்றே”


அழகிய வண்ண மாடங்கள் சூழ் ஆயர்ப்பாடியில் திருக்கோட்டியூர்-குடிகொண்ட கேசவன் பிறந்த தருணம் அது. பாடல் குழந்தையின் அழுகுரலோடு தொடங்குகிறது.

ஊரே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆனந்தக்கூத்தாடுவதை காதுகளுக்கு உணர்த்துகின்றன ஆர்ப்பரித்து எழும் வயலின்களின் இசைப்பிரவாகம்.




இக்கால ஹோலிப் பண்டிகை போல அக்காலத்தில் மக்கள் எண்ணெய் மற்றும் சுண்ணம் எதிரெதிர் தூவி விளையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். கண்ணன் வீட்டு முற்றமே எண்ணெய் + சுண்ணப் பொடிகள் கலந்த சேறு நிறையப்பெற்றதாம்.



“ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்

நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்,

பாடுவார்களும் பல்பறை கொட்டநின்று,

ஆடுவார்களும் ஆயிற்றாய்ப் பாடியே.”




கண்னன் பிறந்த நாளின் மகிழ்ச்சிப்பெருக்கில் மக்கள் ஓடியாட, ஏற்கனவே சேறாகி இருந்த இடமாதலால், விழுந்தனராம், ஆரத்தழுவி மகிழ்ந்தனராம். பாடலின் இந்த வரிகளுக்கான மெட்டு அந்த சூழலின் வேடிக்கை மற்றும் கொண்டாடும் உள்ளப்பூரிப்பை அழகாக எடுத்துரைக்கும்.

எங்கிருக்கிறார் அந்த குட்டிக்கண்னன் என்று ஆர்வத்தோடு விசாரிக்கும் மக்கள், பாடி, பறை கொட்டி ஆடி மகிழ்ந்தார்களாம். “பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்றுஎன்ற வரி வரும் போது, வரும் தாள இசையை கவனியுங்கள்.






“கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்

பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்,

ஐய நாவழித் தாளுக்கங் காந்திட,

வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே.”


மண் உண்ட கண்ணனை, அசோதை வாயைத்திறக்கச் சொல்லிக் கேட்ட போது உள்ளே உலக உருண்டையைக் கண்ட கதை கேட்டிருப்போம்.

இங்கேயோ இப்போது தான் பிறந்த கைக்குழந்தை கண்ணனாயிற்றேஇங்கே ஒரு தாய் தன் கைக்குழந்தையை சீராட்டும் நேரம் என்பதால், இசையின் ஆரவாரம் எல்லாம் அடங்கி தாய்மையின் மென்மையை உணர்த்துகிறது.


 தாயார் அசோதை குழந்தையின் சிறிய கையையும் காலையும் நீவி விட்டு, இளமஞ்சள் கொண்டு நாக்கினை வழித்த போது, வாயினுள் உலகைக் கண்டாளாம்.


 “வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளேஎன்ற வரிகளின் மெட்டு மற்றும் பின்னணியில் ஒலிக்கும் இசையில் தெறிக்கும் அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யம் அபாரமாக கதை சொல்லுகிறதல்லவா.









0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons