நினைத்தாலே உடல் நடுங்குகிறது. கண்ணைத் திறந்தாலும் சரி, மூடினாலும் சரி , அந்த சம்பவம் மறுபடி மறுபடி, மனதில் replay ஆகிறது. அழுது அழுது தமிழ் நாட்டின் காவிரி போல கண்கள் வற்றி விட்டன. இதே கண்களால் தானே என் உயிருக்கு உயிரான தம்பி உடல் நசுங்கி, ரத்தம் சிதறி சாவதைப் பார்த்தேன் .
என் முன்னாலேயே என் தம்பியை ஈவு இரக்கமின்றி கொன்ற ராஜசேகரை சும்மா விடக் கூடாது. இன்றிரவு எப்படியாவது அவனைப் பழி வாங்க வேண்டும். பழிக்குப் பழி ; ரத்தத்திற்கு ரத்தம் ! காலங்காலமாக எளியோரை வலியோர் நசுக்குவது தொடர்ந்து வருகிறது. எளியோர் என்றால் அவ்வளவு இளக்காரமா ?
சூரியன் மேற்கே transfer வாங்கி சென்று விட்டான். கும்மிருட்டு. எனக்குப் பழகியதால் நன்றாகவே வழி தெரிந்தது. ராஜசேகரின் வீடு ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் 4 வது மாடியில் உள்ளது. பணத்தை எப்படியெல்லாம் செலவழிப்பது என்று சிந்திக்கும் வர்க்கம் வசிக்கும் இடமென்பதால் பாதுகாப்பு எப்போதுமே கொஞ்சம் பலமாகத் தான் இருக்கும். அப்படியே அந்த வீட்டை சுற்றி சுற்றி வந்து நோட்டம் பார்த்தேன். வீட்டின் அனைத்து கதவுகளும், ஜன்னல்களும் பூட்டியிருந்தன . எப்படி உள்ளே நுழைவது என மண்டையை உடைத்து கொண்டிருந்த போது, சற்றே திறந்திருந்த பால்கனிக் கதவு கண்ணில் பட்டது. கடவுளுக்கு ஒரு மானசீக நன்றியை சொல்லி விட்டு, அந்த நான்காம் மாடியை அடைவதற்குள் நாக்கு-அவுட் ஆகிவிட்டது. படுபாவி இவ்வளவு உயரத்திலா கட்டி வைப்பான்?
பால்கனி விளிம்பில் அமர்ந்தவாறே உள்ளே பார்வையை மேய விட்டேன். சோபாவில் சாய்ந்தபடி ராஜசேகர் ஒரு தட்டு நிறைய தின்பண்டங்களை வைத்து கொறித்து கொண்டிருந்தான். என் வெறியோடு , பசியும் கை கோர்த்துக் கொள்ள, கொல்லப்பட்ட என் தம்பியை ஒரு முறை மனதில் நினைத்துக் கொண்டு, காரியத்தில் இறங்கினேன். தம்பியை நினைக்க நினைக்க என் ரத்த வெறி மீட்டர் வட்டி போல பன்மடங்கானது.
இதோ ராஜசேகரை நெருங்கி விட்டேன். இன்று எப்படியும் ரத்தம் பார்க்காமல் திரும்பப் போவதில்லை. ...
.... ஆ ... திடீரென்று இருட்டிக் கொண்டு வருகிறதே !....
.... என்னால் மூச்சு விட முடிய வில்லை !
.... தலை வேறு சுற்றுகிறது !...
ஈனஸ்வரத்தில் கடைசியாய் என் வாய் முனகிய வார்த்தைகள்
.... " யாராவது அந்த கொசு வர்த்திச் சுருளை அணையுங்களேன் ...
- my shortstory published in Nilacharal.com
Related Posts:
2 comments:
ஏன் இந்தக் கொலைவெறி... காலையிலேயே கண்ணை கட்டிருச்சே!!
தாங்கல..
Post a Comment