பொதுவாகவே பேட்டிகளில் வைரமுத்துவைப் பற்றி இளையராஜாவோ, ராஜாவைப் பற்றி வைரமுத்துவோ பேசுவதை தவிர்த்து விடுவார்கள்.
ஆனால் சமீபகால பேட்டி ஒன்றில் ராஜாவைப் பற்றி கேட்ட போது, வைரமுத்து இந்த வயதிலும் அவரது இசை வியப்பூட்டுகிறது என்றார். "சுப்ரமணியபுரம்", "வாரணம் ஆயிரம்" போன்ற பீரியட்??!! படங்களில், 80கள் காலத்திய காட்சிகளில் ராஜாவின் இசை தவிர்க்க முடியாத ஒரு பின்புலமாகிறது. "இப்போதுள்ள இசையமைப்பாளர்களில் யார் உங்களைக் கவர்ந்தவர்?" என்று பவதாரிணி தொலைக்காட்சிக்காக தன் தந்தையை பேட்டி எடுக்க, "நானும் இப்போதுள்ள இசையமைப்பாளன்" தான் என்ற பதிலே, அவரது 66 வயதையும் தாண்டி எப்படி அவரும் அவர் இசையும் contemporary யாக உள்ளனர் என்பதற்கு சாட்சி. இப்போது பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்களின் வயதை விட இளையராஜாவின் திரைஇசை அனுபவம் அதிகம்.
ஏறத்தாழ 35 ஆண்டுகளாக அவரின் இசை நம் கண்ணுக்கு புலப்படாத காற்று போல எங்கும் காற்றலைகளில் வியாபித்துள்ளது. எந்த ஒரு நாளும், எந்த ஒரு எப்.எம் ரேடியோ அலைவரிசையோ, தொலைக்காட்சி சேனலோ ராஜாவின் பாடல்களை ஒலி/ஒளிபரப்பாமல் இருக்கவே முடியாது. அர்த்தராத்திரியில் ஆம்னி பஸ் ஒதுங்கும் ஊர் பேர் தெரியாத உணவு விடுதியிலோ, ஏதோ ஒரு கிராமத்து டீக்கடையிலோ, மினி பஸ்ஸிலோ, உங்கள் iPodஇலோ ராஜா உங்களை வந்தடைந்து கொண்டு தானிருக்கிறார், இருப்பார்.
நான் இந்த மண்ணில் பிறப்பதற்கு 5 ஆண்டுகள் முன்பே தமிழ்த்திரையில் ஊற்றெடுத்துப் பொங்கிய இசைப் பிரவாகம், இன்றும் தொடர்ந்து , என் "விரைவில்" பிறக்கவிருக்கும் சிசுவை ஆட்டுவிக்கிறது என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது. ஆமாம். "நான் கடவுளின்" 'மாதா உன் கோவிலில்" பாடல் ஒலிக்கும் போதெல்லாம் சிசுவின் அசைவு அதிகமாக இருப்பதாக என் மனைவி கூற , நானும் அதனை உணர்ந்து வியக்கிறேன்.( சாதனா சர்க்கத்தின் "அம்மா உன் பிள்ளை" version க்கு எந்த ஒரு அசைவும் இருக்காது; மதுமிதா குரல் தான் பிடிக்கிறது போலும் :-) )
பொதுவாக மக்கள் 50 - 60 வயதுகளில், கடமைகள் முடித்து, பணம் கரைந்து, வியாதிகள் கூடி வரும் போது தான் ஆன்மீகம் பக்கம் திரும்பி, கோவில்,குளம், காசி, ராமேஸ்வரம் என்று அலைந்து பின் ஒரு விதமான Low-profile வாழ்க்கை முறைக்கு வந்து விடுவார்கள். ஆனால், நம் ஆளோ, பணமும் புகழும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிக்கொண்டிருந்த போதே, இசையோடு ஆன்மீகக் கடலிலும் மூழ்கி முத்தெடுத்தவர். இந்த 66வது வயதில், மிஷ்கினோடு பயணம் போகிறார், பாலாவுடன் கைகோர்த்து உடுக்கை ஓசையில் மிரட்டுகிறார், ஒரு பக்கம் காந்தியடிகளின் பாடலுக்கு பஜன் வடிவம் கொடுக்கிறார், ஒரு பக்கம் ஐயப்பனுக்கு கீதமாலை சூடுகிறார், Warner bros தயாரிக்கும் இந்திப் படம், அமிதாப்பின் படம் என பாலிவுட்டில் பாய்கிறார், மலையாளம், தெலுங்கும் கன்னடம் என பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைக்கிறார். இந்த மனிதர் என்றைக்குமே இசைக்காக மெனக்கெடுவதில்லை, இசை இவரது உடலின் ஒவ்வொரு செல்லிலும், ரத்த அணுவிலும் பதிந்துள்ளது. பாடலோ, காட்சியோ அதற்குத் தகுந்தபடி அவர் சிந்தையிலிருந்து ததும்பி வந்து, நம் காதுகளை நிரப்புகிறது. கண் மூடிக் கேளுங்கள் "நந்தலாலா"வின் 'மெல்ல ஊர்ந்து ஊர்ந்து' பாடலை, ஒரு பயணத்தின் சூழலை கண் முன் கொண்டு வரும். "பிச்சைப் பாத்திரம்" பாடல் கேட்போரை என்னமோ செய்து உயிரை அறுக்கிறது என்பதை மறுப்பவர் கிடையாது.
ராஜாவின் குரலைப் பற்றி பலரது கருத்துகள் மாறுபட்டிருப்பினும், எனக்கு அவரது குரலில் ஒலிக்கும் பாடல்களில் ஒரு தனி மயக்கம் உண்டு. யாரோ நம் அருகில் இருந்து, தலையை வருடி கொடுப்பது போன்ற ஒரு 'Feel-good' மனநிலையைத் தருபவை. எப்போது தனியாக வெளியூர், வெளிநாடு பயணித்தாலும், என்னுடன் துணையாக டிக்கெட் இன்றி பயணம் செய்பவர் இளையராஜா மட்டுமே. பிற இசையமைப்பாளர்களின் இசையில், எனக்குத் தெரிந்துஅவர் பாடியது மிகக்குறைவே. தன் புத்திரர்கள் தவிர M.S.V. மற்றும் S.P. பாலசுப்ரமணியம் அவர்களின் இசையில் தான் பாடியிருக்கிறார். அதுவும் யுவனின் இசையில் அவர் "நந்தா" படத்திற்காக பாடிய சோகப்பாடல்கள் கேட்ட போது, யுவனின் துள்ளலான இளைமைத் ததும்பும் இசையில் ராஜா பாடினால் எப்படி இருக்கும் என ஏங்கியிருக்கிறேன். "பட்டியலில்" அவர் பாடிய "நம்ம காட்டுல" கேட்கும் போதெல்லாம் அவர் ஏற்கனவே பாடிய "நேத்து ஒருத்தர " பாடலின் "பாட்டு தான், புதுப்பாட்டு தான்" வரி தான் நினைவுக்கு வந்து ஏமாற்றமடைந்தேன்.
இப்போது, சமீபத்தில் இசை வெளியீடாகியிருக்கும் "சர்வம்" படத்தில் இசைஞானி பாடியுள்ள "அடடா வா அசத்தலாம்" என்ற அசத்தலான பாடலை கேட்ட போது, என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. இப்பதிவினை எழுதத் தூண்டியதே இப்பாடல் தான். தோற்றத்தில் ஒரு பழுத்த சாமியாரைப் போன்ற நம் ஞானி இப்பாடலை, அதுவும் துள்ளலோடு அனுபவித்துப் பாடுவதை கற்பனை பண்ணி பார்த்தால் நம்பவே முடியவில்லை. நீங்களே இங்கு கேட்டுப்பாருங்கள், தன்னால் சொல்வீர்கள் - "ராஜா எப்பவுமே ராஜா தான்" என்று.
Related Posts:
6 comments:
நல்ல பதிவு :)
ராஜாக்கு நிகர் ராஜாவே தான்...இசைஞானி மேன்மேலும் புகழ் பெறட்டும்.
"இசை ஞானி" இளையராஜா அவர்களின் இசைப்பயணம்..."இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்" என்றால் அது மிகையாகாது....திரு இளயராஜா அவ்ர்கள் உண்மையாகவே "ஆண்டவனால் அனைத்து ஆசீர்வாதங்களையும் அளிக்கப்பட்டவர்"....பணத்திற்கும், புகழுக்கும் மயங்காத அவருடய அற்புதமான குணமும், அவருடைய ஆன்மீக நம்பிக்கையும் தான்...அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றபோதும்....அவரின் எளிமை நம் அனைவரையும்...வியப்பில் ஆழ்த்துகின்றது....நல்ல பதிவு...தொடர்ந்து எழுதுங்கள்....
பின்னூட்ட கருத்துக்களை அனுப்பவும்.....
எட்வின் மற்றும் ராமசுப்ரமனிய ஷர்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
Arumaiyana pathivu....
Antrum intrum entrum RAJA....Rajavukku nigar Rajave...
Vasanth
Post a Comment