Dec 31, 2008

இசைஞானிக்கு ஒரு பகிரங்க கடிதம்



கால் நூற்றாண்டுக்கும் மேலாக தன் இசையால் தமிழ் உள்ளங்களை வசியம் செய்து வரும் இசைஞானிக்கு வணக்கம்.

தென்றல் தெற்கிலிருந்து புறப்படும் என்பார்கள். சரி தான் ! பண்ணைபுரம் தெற்கில் தான் உள்ளது. என்ன தான் இந்தி எதிர்ப்பு இருந்தாலும், புரியாத அம்மொழிப் பாடல்களில் மயங்கிக் கிடந்த தமிழனைத் தட்டி எழுப்பி தமிழிசையைத் தவழ விட்டவர் நீவிர்.
"உமக்கு 20 எனக்கு 60"!!! ம்! வயதைத் தான் சொல்கிறேன். இந்த அற்பப் பிறவி ஜனிப்பதற்கு முன்னால் இசைத்துறையில் நுழைந்து தனக்கென ஒரு ராஜ்ஜியம் அமைத்து, இன்றும் இசைராஜாங்கம் செய்து வருவது சாதாரண விஷயமல்ல. கருப்பு-வெள்ளை படங்களில் தொடங்கி, இப்போது DTS படங்களிலும் தொடரும் உங்கள் இசைப்பணி பிரமிப்பூட்டுகிறது. உங்களை நேரில் சந்தித்தால் நாட்கணக்கில் பேசுமளவிற்கு உங்களிடம் விஷயங்களும் என்னிடம் வினாக்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கடிதம் மூலம் வெளிப்படுத்துகிறேன். ..

நாட்டுப்புறப் பாடல்களின் நயங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து நீங்கள் தான். கடிகார முள்ளின் சத்தம், காலை நேர 'ஜாகிங்' சத்தம், இதயத்தின் 'லப்-டப்', ரயிலின் கூவல் எல்லாம் உங்கள் இசையில் பாடல்களுக்கு தாளமாயின. மூச்சு விடாமல் பாடும் பாடல், பல டிராக்குகள் கொண்டு ஒலிப்பதிவு செய்த பாடல், உதடுகள் ஒட்டாத பாடல் என எவ்வளவு புதுமை முயற்சிகள்? சித்ரா, மனோ, அருண்மொழி, மின்மினி என எவ்வளவு அறிமுகங்கள் ?

முன்பெல்லாம் உங்கள் இசையில் அதிகம் ஒலித்த குரல்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா, எஸ். ஜானகி, மனோ மற்றும் ஜேசுதாஸ். ஆனால் இப்போதோ ஜேசுதாஸ் தவிர பிற குரல்களைப் பயன்படுத்துவதில்லை. சாதனா சர்க்கம் போன்ற வடக்கத்திய பாடகிகள் தங்கள் இசையில் கூட தமிழ்க்கொலை செய்வது வருந்தத்தக்கது.

கலைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு வாழும் உதாரணம். எப்பேர்ப்பட்ட பாரதிராஜா-வைரமுத்து-இளையராஜா, மணிரத்தனம்-இளையராஜா, பாலச்சந்தர்-இளையராஜா, தங்கர்பச்சான்-இளையராஜா இவையெல்லாம் மீண்டும் அமையாதா என்று ரசிகர்கள் ஏங்கித் தான் போயிருக்கிறார்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த, நெருக்கமான பாலுமகேந்திரா, பாசில், பாலா போன்ற இயக்குனர்களுக்கு அருமையான பாடல்களை வழங்கி வரும் நீங்கள், பி.வாசு, ஆர்.கே . செல்வமணி போன்ற சில இயக்குனர்களுக்கு முன்பு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துப் பின் வர வர மிக சராசரியான பாடல்களை அளித்து அவர்களும் பிற இசையமைப்பாளர்களிடம் சென்று விட்டார்கள். ஏன் இந்த ஓரவஞ்சனை?

எம்.எஸ்.விக்கு ஒரு கண்ணதாசன் போல, இளையராஜாவுக்கு ஒரு வைரமுத்து என எல்லோரும் சிலாகித்திருந்த வேளையில் ஏழே ஆண்டுகளில் அக்கூட்டணி உடைந்தது மாபெரும் வேதனை. வைரமுத்துவைப் பிரிந்த பின்னரும் நீங்கள் எவ்வளவோ ஹிட் பாடல்களைக் கொடுத்தீர்கள், கொடுத்து வருகிறீர்கள். ஆனால் உங்கள் பாடல்களில் அந்த ஏழு ஆண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொது இலக்கியத்தரம் குறைந்து தான் பொய் விட்டது என்பது கசப்பான உண்மை. கண்ணதாசனின் வரிகளுக்கு இசையமைத்த உங்கள் ஆர்மோனியம், பின்னர் சில கவிஞர்களின் அர்த்தமட்ட்ற வரிகளுக்கும் இசையமைப்பது சற்றே நெருடலாக உள்ளது. தற்போது நீங்களே பாடல்களையும் எழுதுவது சற்றே ஆறுதலை அளிக்கிறது.

இவ்வளவு திறமைகளை உள்ளடக்கிய ஒரு கலைஞனை வட இந்தியா புறக்கணிக்க, Royal Philharmonic Society யில் ஆசியாவிலேயே ஒருவராக சிம்போனி இசைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழர்களை பெருமிதம் கொள்ள வைத்தீர்கள். ஆனால் இன்று வரை அந்த இசை வடிவம் ரசிகர்களின் காதுகளை எட்டாததில் வருத்தமே.

"திருவாசகத்துக்கு உருகார் , ஒரு வாசகத்துக்கும் உருகார்". தற்போது தாங்கள் முழுமூச்சுடன் சிம்போனியில் திருவாசகம் என்ற மெகா பிராஜெக்டில் ஈடுபட்டுவருவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. அந்த மாபெரும் தமிழிலக்கியத்தை உலகெங்கும் தெரியும்படி செய்ய உங்கள் இசையைத் தவிர வேறு ஒரு சிறந்த ஊடகம் கிடையாது. மென்மேலும் உங்கள் இசைப்பணி சிறந்து தொடருமாறு வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

நிலாச்சாரலுக்காக 2002 வாக்கில் எழுதியது


Related Posts:

2 comments:

Anonymous said...

Please the change font to tamil as it is not readable.

Vignesh said...

Done

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons