எதிரே நின்று வெறித்து பார்த்தவனை பார்க்க பார்க்க வேதனையாக இருந்தது. எப்படி இருந்த கலையான முகம், குழி விழும் கன்னங்கள் , கட்டுடல் எல்லாம் உருக்குலைந்து, எலும்புக்கூட்டிற்கு டைட்டான தோல் சட்டை அணிவித்தது போல இருந்தது. இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற மூன்றெழுத்து தானே என நினைத்த பொது வயிற்றில் மேலும் Hydrochloric acid சுரந்தது. முதலில் என் உயிரின் பாதியான நண்பனை அறிமுகப்படுத்தி விடுகிறேன்.
ஒரே ஊரில் "Birth certificate " பெற்று, ஒரே ஸ்கூல், காலேஜில் "Transfer certificate " பெற்று, ஒரே ஆபீஸில் வேலை செய்யும் இணைபிரியாத நண்பர்கள் நானும் ரபியும். ரபி மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொண்டிருப்பேன். எங்களுக்கிடையில் அவ்வளவு மனப்பொருத்தம். இசையும் இளையராஜாவும் போல் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தோம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில், என் செல்பேசியை சிணுங்க வைத்து, அவசரமாக அண்ணா நகர் ஆர்ச் அருகே வா என பதற்றக் குரலில் ரபி பேச, உடனே விரைந்தேன். அங்கே சாலையோரமாய் ரபியின் Yamaha ஒரு Scooty யை முத்தமிட்ட நிலையில் ஒய்யாரமாய் சாய்ந்து கிடக்க, பக்கத்து திறந்த வெளி உணவகத்தில் இருந்து ரபி கைதட்டி அழைத்தான். அவனுடம் புஜம் வரை நீள கையுறை அணிந்த ஒரு ஜீன்ஸ் யுவதி. அவளை ஸ்வேதா என அறிமுகப்படுத்தி வைக்க , நானும் அவளும் 'ஹாய்' சொல்லி ஒரு ரெடிமேட் புன்னகை பரிமாறிக் கொண்டோம். "சாரிடா மச்சான், ஆக்சிடெண்ட் ஆனா பதட்டத்தில் உன்னை வர சொல்லிட்டேன். எங்க ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. முதல்ல சண்டை போட்டோம், அப்புறமாய் சமாதானமாகி, பிரண்ட்ஸ் ஆயிட்டோம்" என்று வழிந்தான்.
எல்லாம் இந்த கிரகாம் பெல்லை சொல்லணும். செல்பேசி ஊடகத்தில் தொடர்ந்த ரபி-ஸ்வேதா நட்பு, ஒரு சுபயோக தினத்தில் காதல் அவதாரம் எடுத்தது.
நியூஸ் பேப்பரில் கூட ஹிந்து மட்டுமே படிக்கும் மதவெறி பிடித்த ஸ்வேதாவின் அப்பாவிற்கு இந்த விஷயம் தெரிந்தவுடன் ஒரே ருத்ர தாண்டவம் தான். அவளை House arrest இல் வைக்க, ரபி instant தேவதாசாக மாறினான்.
நண்பனின் நிலையைப் பார்க்க சகிக்காமல், register கல்யாணம் செய்யுமாறு ஐடியா கொடுத்து, உயிரைப் பணயம் வைத்து ஸ்வேதாவை கடத்தியும் வந்தேன்.
Register ஆபீஸில் அலுவலக நண்பர்கள் புடைசூழ ரபி-ஸ்வேதா திருமணம் பதிவானது. திடீரென உள்ளே புயலெனப் புகுந்த ஸ்வேதாவின் படைப்பாளி, கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டே , அழைத்து வந்திருந்த சண்டியர்களை ஏவினார். ரத்தம் கொதித்தது எனக்கு. இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த ஆயுதங்கள் கொண்டு அவர்கள் ரபியைத் தாக்க ஆரம்பிக்க, நண்பர்கள் உதவியுடன் நாங்களும் தாக்க ஒரே ரத்தக்களறி. எப்படியோ போராடி ரபி-ஸ்வேதாவை வெளியே அழைத்து வந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி டாட்டா காட்டிய போது, ஒரு ரத்தம் தோய்ந்த அரிவாள் என் முதுகில் சொருகி ரத்த ருசி கண்டது. எப்படியோ புதுமணத் தம்பதிகள் ஆபத்திலிருந்து தப்பியதை நினைத்துப் பெருமூச்சு விட்ட போது கண்கள் இருட்டியது.
இரண்டு மாத ஆஸ்பத்திரி வாசத்திற்குப் பின் ஓரளவு தேறி வந்த பின்னும், உடல் நிலை அடிக்கடி மோசமானது. ஆறேழு மாதமாய் அந்த ஆஸ்பத்திரியின் நிரந்தர உறுப்பினர் கார்டு வாங்காதது தான் பாக்கி. அடிக்கடி சுவாசக் கோளாறு வந்து, உடல் இளைத்து அட்மிட் ஆகியிருந்த என்னைப் பார்க்க வந்த ரபியின் முகத்தில் வழக்கமான ஒளியே இல்லை. முதல் திருமண நாள் முடிந்த சூட்டோடு அவளை விவாகாத்து செய்யப் போவதாக , ஏதோ சவரம் செய்யப் போவதைப் போல சாதாரணமாக சொன்னான்.
Positive Attitude கொண்ட நான், ரத்தம் தோய்ந்த அரிவாள் வெட்டினாலோ, ஏற்றிய ரத்ததினாலோ, HIV Positive என்று கண்டறியப்பட்டு , நோய்களின் கூடாரமாய்...
எதிரே நின்று வெறித்துப் பார்ப்பவனைப் பார்க்க பார்க்க வேதனையாய் இருந்தது.
கண்ணாடியை உடைத்து விடலாம் போல இருக்கிறது.
1 comments:
அட நாடோடிகள் படத்திற்கு இன்ஸ்பிரேஷன் மாதிரி இருக்கே....2001 லயே எழுதி இருக்கீங்க
Post a Comment