
வாசு, கழுத்தில் ஐ.டி. கார்டு தொங்கும் சாஃட்வேர் நிறுவன வேலை, ATM நிறைய சம்பளம், கிண்ணென்ற கட்டுடல் என வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து பார்த்துவிட ஆசைப்படும் ரகம்.
வலைத்தளத்திலேயே வாழ்க்கை நடத்துவதால், அதன் மேல் ஒரு விதமான வெறுப்பு உண்டு . அதுவும் அந்த அருமையான அறிவியல் கண்டுபிடிப்பை அரட்டை அடித்து கடலை போட பயன் படுத்துவதை ஜீரணிக்கவே முடியாது வாசுவால். அப்படிப்பட்ட நம் வாசு, தற்செயலாய் ஒரு அரட்டை அரங்கில் நுழைய , தனக்குத் தெரிந்த வாசு என்றெண்ணி அபி ஒரு PM அனுப்ப, அன்று பிடித்து காதல் சனி.
இசை, இலக்கியம், சினிமா என அனைத்து துறைகளிலுமே ரசனைகள் அதிசயமாய் ஒத்துப் போக, இருவரும் விரல் நுனி நோக அரட்டை அடித்தனர். காய் முற்றினால் கனியாகும், நட்பு முற்றினால் , வேறென்ன காதல் தான். ஒரு சுபயோக தினத்தில் கணினி காதல் தூது செல்ல இருவரும் முகம் சிவந்தார்கள். அந்த ஞாயிறே முன்பின் பார்த்திராத இருவரும் சொல்லி வைத்த உடையில் தாஜ் ஹோட்டலில் 9.30 மணிக்கு சந்திப்பதாகத் திட்டம்.
ஒ.கே. வானத்திற்கு வெள்ளை அடித்தாயிற்று. வாசுவின் அறை புயல் நுழைந்த கூடாரம் போலிருந்தது. எங்கும் உடுத்திப் பார்த்துப் பின் நிராகரித்த உடைகள் சிதறியிருக்க, மூன்று முறை குளித்து, ஆறு முறை ஹேர் ஸ்டைல் மாற்றி , perfume சிதறி ஒரு வழியாய் வாசு தயாராக, கடிகாரம் ஒன்பது அடித்து ஓய்ந்தது.
அவசரமாய் தாஜ் ஹோட்டலை அடைந்து , சிரம் சாய்த்து கதவு திறந்தவனைப் புறக்கணித்து உள்ளே lobby யில் எங்காவது கரு நீல உடை தென்படுகிறதா என வாசுவின் கண்கள் ஸ்கேன் செய்தன.
"ஹாய்" என்ற வசியக் குரல் கேட்டுத் திரும்பினால், அங்கே அநியாயத்திற்கும் ஸ்மார்ட் ஆக கரு நீல T-shirt இல் அசத்தலான ஒரு சிரிப்பை உதிர்த்தான் அபினேஷ். காதலோடு அபினேஷ் நீட்டிய ரோஜாவை வாங்கிய போது அதை விட சிவப்பாக இருந்தது வாசுகியின் முகம்.
0 comments:
Post a Comment