Apr 14, 2009

தமிழினி மெல்லச் சாகுமா?


உலக நாடுகளை எல்லாம் ஆட்டுவிக்கும் வல்லரசு அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு முன்பே , பல நாடுகளில் மொழியே தோன்றாமல் மக்கள் காட்டுவாசிகளாக வாழ்ந்து கொண்டிருந்த போதே தமிழர்கள் நாகரீகமாக வாழ்ந்து இலக்கியங்கள் பல படைத்தவர்கள் என்பது சரித்திரம் . கல் தோன்றி மண் தோன்றா தமிழை, தமிழர்களாகிய நாமே, கல், மண் அள்ளி மூடிக்கொண்டு வருகிறோம். தாய் மொழி என்பது மனிதனுக்கு கண் போன்றது. பிற மொழிகள் டார்ச் லைட் போன்றவை. பார்வை தெரியாத போது இருளில் நாம் டார்ச் சை உபயோகிப்போமே தவிர எப்போதும் கண்கள் கொண்டே பார்த்து வருகிறோம். அவ்வாறு தேவையான சமயங்களில் மட்டுமே பிற மொழிகளை பயன்படுத்தினால் நம் மொழி பிழைக்கும். முன்பு ஆங்கிலேய துரைகளுக்கு அடிமையாக இருந்த நாம், இன்று ஆங்கிலத்திற்கு அடிமையாக இருக்கிறோம்.
ஆங்கில கலப்பின்றி நம்மால் ஒரு வாக்கியம் கூட பேச முடியாது. இதற்கு காரணம் ஆங்கிலேயர்கள் அல்ல, நாமே தான். பிறக்கும் குழந்தைக்கு மறந்தும் தமிழ் கலவாத , சுத்தமான வடமொழியிலோ ஆங்கிலத்திலோ பெயர் வைப்பது தான் நம் வழக்கம். அக்குழந்தை பள்ளி சென்றால் அங்கு ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு மட்டுமே கற்பிக்கப் படுகிறது. தமிழ் என்பது ஒரு மட்டமான, தீண்டத் தகாத மொழி போன்ற ஒரு மாயையை உருவாக்கி விட்டார்கள். பள்ளி முடிந்து வீடு வரும் குழந்தையிடம் பெற்றோர்கள் பேசுவதும் ஆங்கிலத்தில் தான். பொழுது போவதற்கு படிப்பது ஹாரி பாட்டர் போன்ற புத்தகங்களே. நம் புராண, விக்ரமாதித்யன், பஞ்ச தந்திரக் கதைகளுக்கு ஈடாகுமா ஹாரி பாட்டரின் மாயலோகம் ?
தொலைக்காட்சியில் தமிழை மென்று தின்று கடித்துத் துப்பும் தொகுப்பாளர்கள், திரைப்படங்களிலோ பெயரிலிருந்து, பாடல் வரிகள் வரை ஆங்கிலத்தின் கையே ஓங்கியுள்ளது .
தான் தான் தமிழில் பேசுவதில்லை. ஆனால் தமிழில் பேசுவோரை அற்பப் புழுவைப் போல ஏளனமாகப் பார்க்கும் மக்கள் சென்னை போன்ற நகரங்களில் அதிகம். அதிலும் குறிப்பாக இளம் பெண்கள், ஏதோ ஆங்கிலத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல நுனி நாக்கில் சுழற்றி அடித்து , தமிழை புறக்கணிப்பது சகஜம். புரிகிறதோ இல்லையோ ஆங்கில நாளிதழ், நாவல்கள் படிப்பது தான் பெருமை. நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் மாதங்களின் பெயரனைத்தும் தெரியும்? தமிழ் புத்தாண்டு தேசிய விருது வாங்கும் படம் போல வருவதும் தெரியாது போவதும் தெரியாது . ஆனால் ஆங்கிலப் புத்தாண்டுக்கு நாடே விழாக்கோலம் பூண்டு சாராயம் ஆறோடும்.
நாம் யாரும் 'காலை வணக்கம்', 'மன்னிக்கவும்' என்றெல்லாம் சொல்வதில்லை . அனிச்சையாக வாயில் 'Good Morning', 'sorry' தான் வந்து விழும். மீட்டர், லிட்டர் போன்ற அளவுகளாகட்டும், அறிவியல் சொற்களாகட்டும் எங்கும் ஆங்கிலத்தின் அத்து மீறிய ஆளுமையைக் காணலாம்.
பிற புலவர்கள் தமிழில் பிழையிருந்தால் தன் தலையில் எழுத்தாணி கொண்டு குத்திக் கொண்ட சீத்தலைச் சாத்தனார் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் தலை சல்லடை ஆகியிருக்கும்.
தமிழினி மெல்லச் சாகத்தான் வேண்டுமா ?
முடிந்த வரையில் பிற மொழிக் கலப்பிலாமல் பேச முயற்சிப்போம். தமிழில் புதிய அறிவியல் பெயர்கள் புனைவோம். சங்க கால இலக்கியங்களை இளைஞர்களுக்கு அறிமுகம் செய்து அதன் சுவையை உணரச் செய்வோம். "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் " என்ற பாரதியின் வரிகள் பொய்யல்ல என்று தமிழ் பேசும் நல்லுலகம் உணரட்டும்.
நிலாச்சாரலில் வெளியான எனது படைப்பிலிருந்து ....
Related Posts:

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons