Jun 21, 2009

Washing Machine

சின்ன வயசிலிருந்தே பாம்பு சட்டையை உரிப்பது போல சட்டை பேன்ட்டை கழற்றி ஒரு சுற்று சுற்றி அழுக்குத்துணி கூடைக்குள் கோல் போடும் வரை தான் தெரியும். அதற்குப் பின் அம்மாவின் கைவண்ணத்தில் அது புதுசு போல துவைக்கப்பட்டு, அயர்ன் பண்ணி பீரோக்குள் வந்து விடும். என்ன தான் இப்படி கையில் ரின் படாமல் வளர்ந்தாலும் , பிழைப்பிற்காக சென்னை வந்து நண்பர்களுடன் பேச்சிலர் அறையில் அடைக்கலமான போது கிடைக்கிற ரெண்டு பக்கெட் தண்ணியில துவைக்கிற கொடுமை இருக்கே, அது அனுபவிச்சா தான் தெரியும். என்ன தான் ஜீன்ஸ் பேண்ட்ட வாரம் பூரா துவைக்காம போட்டாலும், வாரக் கடைசியில துவைச்சு தான ஆகணும். அதனால நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து , ஒரு துணிக்கு 1.50 ரூபாய் என்ற கணக்கில் துவைத்து தர ஒரு பாட்டியை பேசி முடித்தோம். நாங்க தான் பேசி முடித்தோமே தவிர அந்தப் பாட்டி பேசவே இல்லை. அது ஒரு ஊமைப் பாட்டி. ஊமைப் பாட்டி என்று சொல்வதற்கு பதில் "ஊமை விழிகள்" பாட்டி என்று சொல்லலாம்.


அதிகாலையில் அறைக்கதவைத் தட்டாமல், தள்ளித் திறந்து நிலைக் குத்திய மாறுகண் பார்வையோடு நிற்கும் அந்தப் பாட்டியைப் பார்த்தாலே தூக்கி வாரிப் போட்டு தூக்கம் கலையும். அதுலயும் கூடத் தங்கியிருந்த ஒரு பயந்த சுபாவ நண்பனுக்கு அந்தப் பாட்டியைப் பார்த்தாலே கிலி தான். எங்களுக்கெல்லாம் ஐஸ்வர்யா ராய் கனவில வந்தா, அவன் கனவுல அந்தப் பாட்டி வந்து பீதியக் கிளப்பும். ஒரு நாள் மொட்டைமாடியில பல் விளக்கிட்டு இருந்த அவன் எங்களையெல்லாம் கதறி கூப்பிட, நாங்க ஓடி வந்து பார்த்த காட்சி... ஆசை ஆசையா, முதல் சம்பளத்துல வாங்கின என் ராசியான வெள்ளைச் சட்டைய தரையில போட்டு தன் காலால சட்டைக்காலர (Collar) முரட்டுத்தனமா தேய்ச்சிட்டு இருந்துச்சு அந்த ஊமை விழிகள் பாட்டி. அன்னைக்கே கணக்கு முடிச்சு கல்தா கொடுத்து, கனவு வராம தூங்கினான் அந்த பயந்த நண்பன்.


அடுத்த வந்த நடுவயது அக்கா நன்றாகவே துவைத்தாள். குடுத்த காசுக்கு அதிகமாகவே பேசவும் செய்தாள். துவைக்கப் போட்ட சட்டை பாக்கட்டில் இருக்கும் சினிமா டிக்கெட்டைப் பார்த்து "என்ன பழனி? ரெண்டு மாயாஜால் டிக்கெட் இருக்கு , கேர்ள் பிரென்ட் கூடவா? " என்பது, ஏ.டி.எம். மினி ஸ்டேட்மென்ட்டைப் பார்த்து "என்ன தம்பி, இந்த மாசம் சம்பளம் இவ்வளவு தானா?" என ஒரே அராஜகம் தான்.

ஒரு நாள் அதிசயமா நாங்க வச்ச பொறியில, போனாப் போகுதுன்னு வந்து மாட்டுச்சு ஒரு சுண்டெலி. நல்லா அழகா, துறுதுறுவென மின்னும் கண்களோடு மிக்கி மவுஸ் மாதிரி இருந்த அதைக் கொல்லவே மனசு வரல எங்களுக்கு. கிணத்து மேட்டுல எலி இருக்கும் எலிப்பொறியோடு நாங்க உட்கார்ந்து பேசிட்டு இருக்கும் போது, துவைக்க அங்க வந்த அக்கா , எலிப்பொறியை புடுங்கி, லாவகமா எலியைக் கையில புடிச்சு, அது கூட பேச ஆரம்பிச்சுது. "காலையில என்ன பலகாரம் , யாரு வீட்டுல சாப்பிட்ட ?" என்று கேட்டுக்கிட்டே , வெண்டைக்காய் பிஞ்சா முற்றலா என உடைப்பது போல எலியோட நாலு காலையும் வெடுக் வெடுக்கென திருகி உடைச்சது. ரியாக்ட் பண்ணக்கூட முடியாம, நாங்க அப்படியே அதிர்ச்சியில உறைஞ்சு உட்கார்ந்திருந்தோம் . நாலு காலையும் fracture ஆக்கிட்டு , எலியை ஒரு கேரி பேகில பேக் பண்ணி கையில கொடுத்துட்டு போயிடுச்சு.
அந்த எலியோட கண்ணுல தெரிஞ்ச பயம் கலந்த வலியைப் பார்க்க முடியாமல், முகத்தை அந்தப் பக்கமாய் திருப்பி கருணைக் கொலை செஞ்சு அதற்கு விடுதலை கொடுத்தேன். அன்றைக்கு முழுதும் அந்த எலும்பு உடையும் "க்ரக்க்..." சத்தம் காதில் கேட்டுக் கொண்டே இருந்ததால் எங்களுக்கு சாப்பாடு இறங்கவில்லை.

பின் சில தினங்களில் எனக்கு திருமணம் நாள் குறிக்கப்பட்டு, அதே வீட்டில் கீழ் போர்ஷனில் நாங்கள் குடிவர, நண்பர்கள் அளித்த பரிசு ஒரு " Washing Machine ".



Related Posts:

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons