தட்டுத்தடுமாறி எழுந்து அமர்ந்து , சுவற்றில் சாய்ந்தான் தமிழ்ச்செல்வன். இந்த இருட்டறைக்குள் தள்ளப்பட்டு எவ்வளவு யுகங்கள் ஆனதென்றே தெரியவில்லை அவனுக்கு. மீண்டும் சூரியனைக் காண்போம் என்ற நம்பிக்கையும் எப்போதோ அஸ்தமனமாகியிருந்தது.
இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்தே அவன் மக்களுக்கும், இயக்கத்திற்கும் வலிகளும் இழப்புகளும் வரிசை கட்டி வந்தன. அயல் நாட்டிற்கு இயக்க அலுவலாய் வந்தவனை நிலைகுலையச் செய்தன அடுத்தடுத்து வந்த அதிர்ச்சி செய்திகள். வந்த ரகசிய கட்டளைப்படி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவன் , ஆண்டின் இறுதியில் மிச்சமிருந்த கடமை அழைக்க , பொய் பாஸ்போர்ட்டில் நாடு திரும்பினான். வலிய வந்து வலையில் சிக்கிய எலியாய் அகப்பட்ட தமிழ்ச்செல்வனை தயாராயிருந்த வரவேற்புக் குழு அள்ளிக்கொண்டு போனது வெள்ளை வேனில் . வெள்ளைப் புறா பறக்க இயலாத நாட்டில் வெள்ளை வேனின் அக்கிரமங்கள் அவன் அறிந்ததே.
இயக்கத்தின் கணக்கு வழக்குகளை நிர்வகித்தவன் என்ற முறையில் அவனிடம் இருந்து அவர்களுக்கு நிறையவே ரகசியங்கள் தேவைப்பட்டன. தான் வேட்டையாடிய எலியை அவ்வளவு சீக்கிரம் கொன்று விடாமல், ஓட விட்டு, விளையாடி, அடித்து, குற்றுயிரும் கொலையுயிருமாக்கிக் கொல்லும் பூனை போல அவனை உயிருக்கு சேதமில்லாமல் உருக்குலைக்க தயாரானது அரசு. கொடுங்கோலன் இடி அமீனின் மறு பிறப்பு என்று தன்னைத்தானே பெருமையாய் சொல்லிக்கொள்ளும் கேப்டன் விக்கிரமனுக்கு தகவல் பறந்தது.
விக்கிரமனைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அதீத கற்பனா சக்தி, அறிவியல் அறிவு, கொடூர சிந்தனை எல்லாம் சேர்த்து பிசைந்த ஒரு விநோதக் கலவை அவன். அவனைப் பொறுத்தவரை அகப்படும் ஒவ்வொரு கைதியும் அவன் அறிவியல் பழக வந்த வெள்ளெலிகள். அதுவும் ஹிட்லரின் கேம்ப்புகளை வெட்கப்பட வைக்கும் அவனது சித்திரவதைக் கூடத்தில் இயக்கத்தைச் சேர்ந்தவர் சிக்கினால் அவனது கற்பனை குதிரை ரெக்கை கட்டும்.
தன்னுடைய வன்முறைப் பிரவாகம் செல்லுபடியாகாத விரக்தியில், இவன் எப்படியும் சொல்ல மாட்டான் என்ற முடிவுக்கு வந்தவன். "அந்த தமிழ் நாயை இன்னும் கொஞ்சம் ரத்தச் சகதியாக்கிட்டு , "அந்த" அறைக்கு கூட்டிட்டு வாங்க" என்று கரை படிந்த பற்களை காட்டி சிரித்தபடி கண் அடித்தான். அவனது கொடூர நாடகம் அரங்கேறும் போதெல்லாம் அவனுக்கு ஒரு விதமான உச்சக்கட்ட பரவச நிலை வரும். அன்று தமிழ்ச்செல்வனுக்கு காத்திருந்த வினோத தண்டனையால் , அது அன்று சற்று அதிகப்படியாகவே மண்டையைத் திறந்து மகுடி ஊதியது.
நைந்த துணியைப் போல சுருட்டி, இழுத்து வந்து போடப்பட்ட தமிழ்ச்செல்வனை, தன் பூட்ஸ் காலால் நெட்டித் தள்ளி சற்றுத் தள்ளியிருந்த அந்த ஆறுக்கு ஆறு இருட்டறைக்குள் முடக்கினான். கண்கள் திறக்கக்கூட சக்தியற்றவனை உலுக்கி எழுப்பி, " நீ தானடா பரதேசம் போய் ஆயுதங்கள் வாங்கி இவனுங்களுக்கு அனுப்புறது ? உனக்குத் தெரிஞ்சிருக்கணுமே இந்த வாசனை. கந்தகம் கூட சில விசேஷப் பொருட்கள் சேர்ந்து தரையெல்லாம் பூசியிருக்கு. உன் உடம்பில இருந்து ஒரு சொட்டு நீர் விழுந்தாலும், நீ பஸ்பம். உயிரோட இருந்தா சரியா 48 மணி நேரம் கழிச்சு பார்க்கலாம்" என்று கொக்கரித்தான் விக்கிரமன்.
கண்கள் திறந்தாலும் மூடினாலும் வித்தியாசம் தெரியாத இருட்டு அறை. வைகாசி மாத வைகை போல வாய் வறண்டிருந்தது. உடலெங்கும் இரும்புக் கம்பிகள் குசலம் விசாரித்த தடங்களும் புண்களும் இருக்க, அவசரமாய் வந்த ஆறு சொட்டு சிறுநீரைக் கூட கையில் பிடித்து வாயில் ஊற்றிக் கொண்டான். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்த வாந்தியை வாய் பொத்தி அடக்கி, அவமானத்தில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தான்.
" இருக்கிறாயா தமிழ் நாயே" என்றபடி உள்ளே வந்த விக்கிரமனுக்கு, எஞ்சி இருந்த உயிரின் தருவாயிலும் திடத்தோடு இருந்த தமிழ்ச்செல்வனின் நிலை கண்டு புருவம் தன்னால் உயர்ந்தது. " பரவாயில்லையே ரெண்டு நாள் தாக்குபிடிச்சுட்டியே ... உன்னை மாதிரி ஒருத்தனப் பார்த்ததே இல்லைடா. நான் உன்கிட்ட ரொம்ப ஒன்னும் கேட்கல , எந்த அயல் நாட்டிலெல்லாம் எந்தெந்த வங்கிகள்ல பணம் வச்சிருக்கீங்க? அதை மட்டும் சொல்லிடு, உன்னை எம்.பி ஆக்கிடலாம் " என்று சொல்லி ஒரு கோர சிரிப்பை உதிர்த்தான். அது அந்த அறையின் சுவர்களில் எதிரொலித்து நாராசமாய் ஒலித்தது.
தட்டுத் தடுமாறி எழுந்து நின்ற தமிழ், தன் சக்தியெல்லாம் திரட்டி, காறித் துப்பினான்.
0 comments:
Post a Comment