அலுவலக வேலையாக பெரு சென்றிருந்த போது ஒரு கடையில் ஆசையாக ஒரு பொம்மையைக் கையில் எடுத்து… முகம் சிவந்து திரும்பிப்பார்க்காமல் வெளியே ஓடி வந்தேன். நம்ம ஊர் பொம்மைகள் சிரித்தபடி தலையாட்டும், இல்லை அலுங்காமல் நடனமாடும். ஆனால் அவர்களுக்கு ஏன் தான் இப்படி ஒரு விவஸ்தை கெட்ட ரசனையோ? வெளியே வந்த பிறகும், பின்னாலேயே துரத்தி வந்தது சேல்ஸ் பெண்களின் சிரிப்பொலி.
பெரு ஞாபகார்த்தமாக இந்த அடல்ட்ஸ் ஒன்லி குறும்பு பொம்மைகளை வாங்கிப் போக முடியாததால், ஒரு மரத்தால் செய்யப்பட்ட பாம்பு பொம்மை வாங்கி வந்திருந்தேன். கையில் எடுத்தால் உயிருள்ள பாம்பைப் போல் குழைந்து நெளியும் அதன் வேலைப்பாடிலும், உண்மை போன்ற தோற்றமளிக்கும் வண்ணத்தீற்றிலும் கவரப்பட்டு பத்து ஸோலெஸைத் தாரை வார்த்தேன். திருவண்ணாமலையை நினைத்தாலே மோட்சம் என்பார்களே, அது போல், என் மாமியாருக்கு, பாம்பை நினைத்தாலே உடல் நடுங்கும். அதற்கும், நான் பாம்பு வாங்கியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இங்கே தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.
சென்னை வந்து பெட்டியைத் திறந்து பாம்பை வெளியில் எடுத்த போது, இவன் இன்னும் திருந்தலையா என்பது போன்ற பார்வை கிடைத்தது பெற்றோர்களிடமிருந்து. சிறு வயது முதலே, என் பொம்மைக் கலெக்ஷனில் ரப்பர் பல்லி, தவளை மற்றும் சிலந்திகள் தான் அதிகம் இருந்திருக்கின்றன. சீனியாரிட்டி காட்டும் அக்கா மற்றும் பிற உறவுக்கார பெண்களை பயமுறுத்தி அலற வைக்கும் சுகமே தனி தான்.
அடுத்தடுத்து வந்த வேலைப்பளுவில் மரப்பாம்பு மறக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளி இரவு அது. பக்கத்து ஃப்ளாட்டில் தங்கியிருந்த பேச்சிலர் நண்பன் என் வீட்டு கேட்டின் மேல் நின்று வாயில் சத்தம் வராமல், கையில் அபிநயம் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தான். பார்க்கிங் ஏரியாவில் ஒரு ஓரமாய், சற்றே பெரிய மண்புழு சைஸில் ஒரு பாம்பு பாவமாய் நின்று கொண்டிருந்தது. நமக்கு ரப்பர், மரப் பொம்மை பாம்புகள் தான் பரிச்சியம், எனவே என் ஆணைப்படி!!! பயந்த சுபாவ பத்தினி கிரிக்கெட் பேட்டால் பாம்பை பரலோகப் பார்சல் செய்தாள். என் நண்பனுக்கோ படபடப்பு அடங்க இன்னொரு பீர் தேவைப்பட்டது. கனவில் கூட கான்டாக்ட் லென்ஸ் கண்ணோடு ஸ்ரீப்ரியா வந்து ’நீயா’ பாட்டு பாடி தூக்கம் கலைத்திருக்கிறார்.
சரியாக ஒரு வாரம் ஓடியிருந்தது. ஏதோ தேடும் போது மரப்பாம்பு கண்ணில் பட, அப்படியே சுடச்சுட ஒரு பிளானும் உருவானது. வெள்ளிக்கிழமை சாயந்திர நேர்த்திக்கடனாக தன் கேர்ள் ஃப்ரெண்டோடு, ECR மார்க்கமாக மாயாஜால் சென்றிருந்தான் நண்பன். அவன் வீட்டு வாசலில், மரப்பாம்பின் வால் மட்டும் தெரியுமாறு வைத்து விட்டு காத்திருந்தேன். கேர்ள் ஃப்ரெண்டை பொறுப்பாக வீட்டருகே இறக்கிவிட்டு வந்தவன், பாம்பைக் கண்டு ஜெர்க்காகி, என் வீட்டு கேட்டில் ஏறி நா வறண்டு கதறினான். ’Machine” ன்னு எழுதியிருந்தாக் கூட ‘மச்சினி’ன்னு வாசிக்கிற ஆங்கிலப்புலமை கொண்ட அவன் நாக்கில் English நடனமாடியது. எல்லாம் பயம் தான். ”ஏன் தான் என்னையே குறி வச்சு வருதுகன்னு தெரியலை? ஏதோ நாகதோஷம் இருக்கு போலன்னு” கண்ணீர் விடாத குறை. சின்ன வயசுல பாம்புக்கு வைத்திருந்த பால், முட்டை எடுத்து சாப்பிட்ட சாபம் அது இதுன்னு புலம்பினவனை சமாதானப்படுத்த ரொம்ப நேரம் ஆனது. அது மரப்பாம்புன்னு மரமண்டைக்கு உரைத்தாலும் கை நடுக்கம் குறையவில்லை.
சரி, ரொம்பவும் தான் பயமுறுத்திட்டோம் போல, கொஞ்சம் இயல்பு நிலைக்கு கொண்டுவரலாம்ன்னு, ’என்ன படத்துக்குடா போனீங்கன்னு?’ கேட்டா…
படம் பெயர் “அஞ்சாதே” வாம்.
Related Posts:
2 comments:
ரொம்பக் கொடுமை பண்ணறீங்க?
ha ha!!..:)
Post a Comment