"அதான் உன்னை வளர்க்கிறோமே , நாய வேற தனியா வளர்க்கனுமா ?" சின்ன வயசில நாய் வளர்க்கணும்ன்னு ஆசைப்பட்டு வீட்டுல கேட்டப்ப வந்த பதில் தான் அது.
இப்ப இருக்கிற தேன் கூடு அடுக்கு மாடிக் குடியிருப்புல எங்க போய் நாய வளர்க்கிறது ? இருந்தாலும் எங்க தெருவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நாய் (நாட்டு நாய் தான்) மேல எனக்கு ஒரு ஸ்பெஷல் பாசம். செகண்ட் ஷோ முடிஞ்சு லேட் நைட்டில வீடு வந்தப்போ கோபத்தோட கணுக்கால் கடிக்க வந்து, நானும் கல்லெறிஞ்சு சண்டையில ஆரம்பிச்சு , அப்புறம் அதுக்கு பிஸ்கெட் போட்டு, மஸ்கா போட்டு சிநேகமாயிட்டோம். அது ஒரு விதமான Commitment-free pet rearing மாதிரி.
தினமும் களைச்சுப் போய் வீடு திரும்பும் போது, எங்கேயோ நீல்மெட்டல் குப்பையக் கிளறிட்டு இருந்தாலும், பைக் சத்தம் கேட்டதும் அதை அப்படியே விட்டுட்டு ஓடி வந்து, பொண்டாட்டிக்கு முன்னாடி வரவேற்கும் ஜீவன் அது.
இப்போ ஒரு நாலஞ்சு நாளா , அந்த நாலு கால் நண்பன் கண்ல படவே இல்லை. தண்ணீ லாரியா, சென்னை மாநகராட்சியா , முதுமையா என்ன காரணம் தெரிய வில்லை. வாங்கி வைத்த பிஸ்க்கட்டுகளை எறும்புகள் மொய்க்க, மனது வலிக்கிறது.
அந்த நாலு கால் நண்பனின் நினைவாக ஒரு பதிவு எழுத வேண்டும் என்று யோசித்த போது தான் தோன்றியது, தமிழில் தான் நாய்களைப் பற்றி எவ்வளவு பழமொழிகள்? ஆதி காலத்திலிருந்தே மனிதனின் மனதில் , வேறு எந்த ஒரு வீட்டு மிருகத்துக்கும் இல்லாத ஒரு இடத்தை நாய்கள் பிடித்திருக்கின்றன என்பதற்கு இவையே சாட்சி.
- நாய்க்குப் பேரு முத்து மாலையாம்
- நாய்க்கு நெய் செரிக்காது
- நாய்க்கு வேலையில்லை, ஆனால் நிக்க நேரமில்லை
- நாய் கிட்ட போய் #### கடன் கேட்ட மாதிரி
- நாயக் குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் ...
- ஓலைப் பாயில நாய் ஒண்ணுக்கடிச்ச மாதிரி "சொள சொள"ன்னு...
- ஆறு நிறைய தண்ணீர் ஓடினாலும் நாய் நக்கி நக்கி தான் குடிக்கும்
- வேலையில்லாதவன் நாயக் கூப்பிட்டு வச்சு சிரச்சானாம்
- கல்லைக் கண்டா நாயக் காணோம் ; நாயக் கண்டா கல்லைக் காணோம்
- நாய் கையில கிடைச்ச தேங்காய் மாதிரி - தானும் திங்காது , அடுத்தவனையும் திங்க விடாது
- வைக்கப்பொடப்ப நாய் காவல் காத்த மாதிரி
- நாய் வால நிமிர்த்த முடியாது
- நாய வேலை ஏவுனா, அது தன வாலை ஏவுமாம்
- நாயக் கொஞ்சினா வாய நக்கும்
- நாய்க்கு வாக்கப்பட்டா குரைச்சு தான் ஆகணும்
- நாய் சகவாசம் சேலையக் கிழிக்கும்
- குரைக்கிற நாய் கடிக்காது
- நாய் நக்கி சமுத்திரம் வத்திப் போயிடுமா ?
- நாய் விற்ற காசு குறைக்காது
- நாய் குரைச்சு விடியுமா? கோழி கூவி விடியுமா ?
- நாய் இருக்கும் இடத்தில் சண்டை இருக்கும்
- நாய் கேட்ட கேட்டுக்கு மாமரத்து நிழலாம்
- சூரியனப் பார்த்து நாய் குரைக்கிற மாதிரி
உங்களுக்குத் தெரிந்த , இதில் விட்டுப் போன பழமொழிகளை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
Keywords: Dog, Dog proverb, proverbs about dogs
Related Posts :
0 comments:
Post a Comment