தந்தூரி அடுப்பில் தகிக்கும் சிகப்பு சிக்கனாக கத்திரி போடும் சித்திரை வெயிலில் வைகை எக்ஸ்பிரஸில் மதுரை நோக்கிப் பயணமானேன். நெற்றியில் இரும்புத்துரு வாசனை நீர் நனைத்த கைக்குட்டை மூன்று முறை நனைந்து காய்ந்திருந்தது. வெளியில் தான் இவ்வளவு வெக்கை என கம்ப்பார்ட்மெண்டில் ஏதாவது பசுமை தேறுமா என்று பார்வையை சுழற்றினால், ஏதோ முதியோர் இல்லத்திலிருந்து கல்விச்சுற்றுலா??!!! அழைத்து வந்தது போல எல்லாம் சீனியர் சிட்டிசன் சலுகையோடு ரயிலேறியவர்கள்!
சும்மாவா பாடினார் இளையராஜா, "ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே" என்று?
ஆலயமணி சரோஜா தேவி தொடங்கி மா..ஆ..ஆ.. ஆ.. சி.. ல்.. லா.. மணி சுனைனா வரை சூடு பறக்கும் அரட்டையில் இருந்தனர் பெரிசுகள்.
நடுநடுவே "அந்த காலத்தில எல்லாம்..." என்ற ஃப்ளாஷ் பேக் வேறு. என் அருகில் இருந்த தாடிக்கார பெரியவர் மட்டும் கருமமே கண்ணாய் தன் தடித்த கண்ணாடி தாண்டி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.
*
என்ன தான் மத்திய அரசு உத்தியோகஸ்தனாக இருந்து என்ன பயன்? மத்திய அரசு கொடுத்த சம்பளப் பணத்தை மாநில அரசின் டாஸ்மாக்கில் தாரை வார்த்து வார்த்து, முருகனுக்கு கழுத்து வரை கடன் தொல்லை. கவலை மறக்க கடை திறந்ததும் டாஸ்மாக்கில் சரணடைந்து விஜய் மல்லையாவின் கருணையால்??!! தன் கடன் சுமையை, இந்த உலகத்தையும் தன் பகல் நேர ரயில்வே ட்யூட்டியையும் மறந்தான்.
இருக்கும் ஒரு வழி இருப்புப்பாதையில் எதிரெதிர் வரும் ரயில்களில் ஒன்றை நிறுத்தி, மற்றொன்று கடந்த பின் சிக்னல் கொடுக்கும் கடமை முருகனுக்கு.
சரக்கு ரயிலின் ஓட்டுனருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் கூவல் ஒலி சமீபத்தில் கேட்ட போது தான் ஏதோ தவறு நடந்திருப்பதாக தோன்றியது. தன் வாக்கி-டாக்கியை தேடி எடுத்து பேச விழைவதற்குள், எதிர் வளைவில் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வருவது தெரிந்தது. ரத்தத்தில் அட்ரினாலின் வெள்ளப்பெருக்கெடுக்க தன்னால் இயன்றவரை நிறுத்த முயன்றார். மிக அருகே வந்து விட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுனரின் வெளுத்த முகம் கூட தெளிவாய் தெரிய... ரயிலும் தன்னால் இயன்ற வரையில் முனகி நிற்க முயன்று முடியாமல்...
நானும் அடுத்து என்ன ஆச்சோ என்று நகமிழந்து உட்கார்ந்திருக்கிறேன்.
ஆனால் என்ன செய்வது? இந்த தாடிக்கார பெரியவர் அடுத்த பக்கம் திருப்பாமல் நித்திரையில் ஆழ்ந்துட்டாரே!
Related Posts:
0 comments:
Post a Comment